இந்தியாவின் பிரபல ஊடகம், ஆதார் ஆணையம் மற்றும் மத்தியப்பிரதேச காவல் துறையினரின் கணினியில் ஊடுருவி சீன ஹேக்கர்கள், தகவல்களை திருட முயன்றதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
லடாக் விவகாரத்தில் இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கு இடையில் மோதல் நீடிக்கிறது. இதனால், எல்லையில் நேரடியாக நுழைய முடியாத சீன அரசு, இந்திய அரசாங்கம் மற்றும் முக்கிய நிறுவனங்களின் கணினிகளிலிருந்து தகவல்களை திருட முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, சீன ஹேக்கர்களின் ஊடுருவல் அடிக்கடி கண்டறியப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க நிறுவனமான இன்சிக்ட் குழுமம், சீன ஹேக்கர்கள் இந்திய அரசாங்கத்தின் கணினிகளில் ஊடுருவியதை கண்டறிந்து, அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், சீன அரசாங்கத்துடன் தொடர்பு கொண்ட, டேக்-28 என்னும் பெயர் கொண்ட ஹேக்கர்கள் குழுவினர், விண்டி என்ற மால்வேரை பயன்படுத்தி இந்திய நாட்டின் நிறுவனங்களில் இருக்கும் கணினிகளில் ஊடுருவியுள்ளார்கள். இதில், இந்தியாவின் பிரபல ஊடகத்தின் கணினியிலிருந்து 500 மெகா பைட் அளவு கொண்ட தகவல்களை திருடியிருக்கிறார்கள்.
அதாவது, இந்த ஊடகத்தில் இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கிடையே நடந்து வரும் மோதல் தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியிடப்பட்டு வந்துள்ளது. மேலும் இந்த பிரச்சனைக்கு பின்பு, மத்திய பிரதேச அரசு, இந்தியாவில் சீன நாட்டின் தயாரிப்புகளுக்கு தடை விதிக்கவேண்டும் என்று அறிவித்திருந்தது. அதன்பின்பு அம்மாநில காவல்துறையினரின் கணினியில் 5 மெகா பைட் அளவு கொண்ட தகவல்கள் திருடப்பட்டிருக்கிறது.
இது மட்டுமல்லாமல், இந்திய நாட்டின் அனைத்து குடிமக்களின் அடையாளங்களை சேகரித்து வந்த ஆதார் ஆணையத்தின் கணினியிலும் அவர்கள் ஊடுருவ முயற்சித்திருக்கிறார்கள். அதாவது அந்த கணினியிலிருந்து 10 எம்பி அளவு கொண்ட தகவல்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், 30 எம்பி அளவு கொண்ட தகவல்களை பதிவேற்றியிருக்கிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்திய ஆதார் ஆணையமானது, சீன ஹேக்கர்கள் தங்கள் கணினியில் ஊடுருவ முயற்சித்தது, தங்களுக்கு தெரியாது என்று கூறியிருக்கிறது. இருப்பினும், பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே ஆதார் குறித்த தகவல்களை எவராலும் ஊடுருவி திருடிவிட முடியாது என்று தெரிவித்திருக்கிறது.