மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வர்த்தக ரெட்டி பட்டி கிராமம் வடக்குத் தெருவில் இசக்கிமுத்து என்ற வேம்பு வசித்து வந்தார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இதில் இசக்கிமுத்து வர்த்தக ரெட்டிப்பட்டி செல்லும் சாலையில் சங்கரசுப்பு என்பவருக்கு சொந்தமான நிலத்தை சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் இசக்கிமுத்து அங்கு குழி தோண்டிக் கொண்டிருக்கும் போது திடீரென மழை பெய்தது.
அப்போது மின்னல் தாக்கியதில் இசக்கிமுத்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இசக்கிமுத்துவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று கோடாங்கிபட்டி கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்த ஆவுடையம்மாள் என்பவர் தனது வீட்டின் முன்பு உள்ள மரத்தடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது மின்னல் தாக்கி படுகாயம் அடைந்தார். இதனையடுத்து ஆவுடையம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆவுடையம்மாள் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகிலா வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.