அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர்ஆண்டி அம்பலம் தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலத்தை விட 11,932 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் தனது வேட்புமனுவில் பல தகவல்களை மறைத்து முறைகேடு செய்ததாக குறிப்பிட்டுள்ளார். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் வாக்குபதிவிற்கு முன் கடைசி 48 மணி நேரம் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்த உச்சவரம்புக்கும் அதிகமாக செலவு செய்ததாகவும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் ஆணையம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.