கே.சி வீரமணி வீட்டில் 551 யூனிட் மணல் இருப்பதும், அதன் மதிப்பு சுமார் 33 லட்சம் என்றும் ஆட்சியரிடம் கனிமவளத்துறையினர் அறிக்கை அளித்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த 16ஆம் தேதி அதிகாலையில் இருந்து இரவு வரை (18 மணிநேரம்) ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீடு மற்றும் 37 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சொகுசு கார்கள், 34 லட்சம் ரூபாய், 5 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, வைரம், வங்கி சம்பந்தமான கோப்புகள், சொத்து சம்பந்தமான ஆவணங்கள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதுமட்டுமின்றி கே.சி வீரமணி வீட்டின் பின்புறம் உள்ள காலி பகுதியிலிருந்து சுமார் 275 யூனிட் மணல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு உரிய ஆவணங்கள் அப்போதைக்கு இல்லை என்று லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்தது. 275 யூனிட் மணல் இருப்பது தொடர்பாக அதுசார்ந்த கனிம வளத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில் நேற்று ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி வீரமணி வீட்டுக்கு சென்ற வேலூர் கனிம வளத்துறை அதிகாரிகள் வீட்டின் பின்புறம் குவிக்கப்பட்டுள்ள மணலை அளவீடு செய்துள்ளனர்.. அப்போது லஞ்ச ஒழிப்பு துறை குறிப்பிட்டதற்கு கூடுதலாக 551 யூனிட் மணல் கூடுதலாக இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து 551 யூனிட் மணல் இருப்பதும், அதன் சந்தை மதிப்பு சுமார் 33 லட்சம் என்றும் திருப்பத்தூர் ஆட்சியரிடம் கனிமவளத்துறையினர் அறிக்கை அளித்துள்ளனர்.. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து வருகிறது. உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் மணல் பதுக்கல் பிரிவின்கீழ் வருவாய்த்துறை, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.