அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்து 16 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள மணக்குளம் கிராமத்தில் இருளாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆட்டு கிடை அமைப்பதற்காக இருளாண்டி தனது 40 ஆடுகளுடன் அச்சங்குளம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே உள்ள வயல்வெளியில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் திடீரென பலத்த மழை பெய்துள்ளது. இதனையடுத்து சில ஆடுகள் அங்கிருத்து ஓடிய போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து ஒன்றன்பின் ஒன்றாக மின்சாரம் தாக்கி அலறியபடி கீழே விழுந்துள்ளது.
இதனையறிந்த இருளாண்டி உடனடியாக மற்ற ஆடுகளை வேறு திசைக்கு அனுப்பியுள்ளார். இதனையடுத்து அவர் மின்வாரியத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்த நிலையில் மின் ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்துள்ளனர். இருப்பினும் மின்சாரம் தாக்கி சுமார் 16 ஆடுகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளது. இதுகுறித்து அபிராமம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் 16 ஆடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததால் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என இருளாண்டி கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.