முதியவரிடமிருந்து காவல்துறையினர் போல் பேசி நூதனமுறையில் ஒருவர் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மதுராந்தகம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இந்தப் முதியவர் தனது மகனான ராமச்சந்திரனின் வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து தனது மகன் வீட்டிலிருந்து 15 கிலோ ரேஷன் அரிசியை எடுத்துக்கொண்டு மாரிமுத்து ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் மாரிமுத்துவிடம் ரேஷன் அரிசி கடத்துகிறாயா? என்று கேட்டு அவரை மிரட்டியுள்ளார்.
அந்த மர்ம நபரின் மிரட்டலான கேள்விக்கு பயந்த அந்த முதியவர் இந்த அரிசியை தனது மகன் வீட்டிலிருந்து எடுத்து வந்ததாக கூறியுள்ளார். மேலும் இது குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள தனது மகனை தொடர்பு கொண்டு பேசுமாறு அந்த முதியவர் கூறியுள்ளார். ஆனால் அதற்கு மறுத்த அந்த மர்மநபர் காவல் நிலையம் வரும்படி மாரிமுத்துவை அழைத்துள்ளார். மேலும் முதியவரின் சட்டைப்பையில் இருந்த 4 ஆயிரம் ரூபாய், செல்போன் மற்றும் 15 கிலோ ரேஷன் அரிசியை பறித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இதனால் அச்சத்தில் அந்த முதியவர் தனது மகன் வீட்டிற்கு சென்று நடந்தவற்றை விரிவாகக் கூறியுள்ளார். இது குறித்து ராமசந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வழிப்பறியில் ஈடுபட்டது உண்மையான காவல்துறை அதிகாரியா? அல்லது காவல்துறையினர் போல் தன்னை பாவனை செய்து கொண்ட மர்ம நபரா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.