இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் இந்திய வீரர்கள் இருவரை அணுக இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது .
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி செயல்பட்டு வருகிறார் .இந்நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு அவருடைய பதவிக்காலம் முடிவடைகிறது. எனவே அவருடைய பதவிக்காலம் முடிவடைவதால் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது .இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன .ஏனெனில் அவர் இந்திய ‘ஏ’ மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட அணியின் பயிற்சியாளராக இருந்து சிறந்த இளம் வீரர்களை உருவாக்கி உள்ளார் .மேலும் தேசிய கிரிக்கெட் அகடமியில் இயக்குனராகவும் இருக்கிறார் .
இந்நிலையில் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே மற்றும் முன்னாள் பேட்ஸ்மேன் வி.வி.எஸ் லட்சுமணன் ஆகிய இருவரையும் பிசிசிஐ அணுகலாம் என தகவல் வெளியாகியுள்ளது .இருவரிடமும் அணியின் பயிற்சியாளராக இருக்குமாறு பிசிசிஐ கேட்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . இதில் முன்னாள் கேப்டன் கும்ப்ளே ஏற்கனவே இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார் .அப்போது விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து வி.வி.எஸ் லட்சுமணனும் கிரிக்கெட் அணியின் ஆலோசனை குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார் .இவர்கள் இருவருமே 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளனர் .இதனால் நல்ல அனுபவம் உள்ள இவர்கள் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு தகுதியானவர்கள் என்று பிசிசிஐ கருதுகிறது.