இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்றத்தேர்தலுக்கு பிறகு கொரோனா இரண்டாவது அலை பெரும் பாதிப்பை உண்டாக்கியது. பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லாத நிலை ஏற்பட்டது. அதன் தாக்கம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கிய நிலையில், ஏற்கனவே ஒன்றரை ஆண்டாக திறக்கப்படாத நிலையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் ஒவ்வொரு கட்டமாக, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்குட்பட்டு கல்லூரிகளையும், 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி வகுப்புகளையும் நடத்த உத்தரவிட்டது.
அதன்பின், 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளியில் வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கியது. இந்நிலையில் வரும் 20ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களில் 50 சதவீதத்தினரை வைத்து பள்ளி வேலைநாள்களில் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்த மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. மேலும் விடுதியில் தங்கியிருக்கும் 8,10,12 வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் பள்ளியில் நேரடி வகுப்புக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளது. பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் ஒப்புதல் கடிதத்தோடு வகுப்புகள் தொடங்கும் இந்த முடிவை பெற்றோர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.
குழந்தைகளுக்கான தடுப்பூசி இன்னும் செலுத்தப்படாத இந்நிலையில், கொரோனா மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கையோடு இருக்குமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளதை பெற்றோர்கள் மேற்கோள்காட்டுகின்றனர். இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள இந்தூர் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் துணைத்தலைவர் ஜிதேந்திர பர்வானி, குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவிவரும் இந்த நிலையில் பள்ளிகளை திறக்கும் அரசின் முடிவு தவறானது என்றும், இம்முடிவு தனியார் பள்ளிகளை மகிழ்ச்சியூட்டும் முடிவு என்றும் விமர்சித்ததோடு, பள்ளிகளை திறக்கும் நடவடிக்கையை பெற்றோர் ஆசிரியர் சங்கம் எதிர்ப்பதாகவும் கூறியுள்ளார். குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியின் வரவை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், அதற்கு முன் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவது ஆபத்தானது எனவும் குழந்தைகளின் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.