வாலிபரிடம் இருந்து நூதன முறையில் மர்ம நபர் 1 லட்சம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிறுவாலை கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரை அலைபேசியில் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் தான் தனியார் செல்போன் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். அந்த நபர் உங்களுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் எங்கள் நிறுவனத்தின் செல்போன் கோபுரம் அமைக்க இடத்தை தேர்வு செய்துள்ளதாக மணிகண்டனிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து முன்பணமாக 25 லட்ச ரூபாயும், மாத வாடகையாக 30 ஆயிரம் ரூபாயும் வாங்கி தருவதாக அந்த நபர் உறுதியளித்துள்ளார்.
அதன்பிறகு மர்ம நபரின் பேச்சை நம்பிய மணிகண்டன் அவர் கூறியபடி முன்பணமாக 1 லட்சத்து 1,500 ரூபாயை அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால் அந்த நபர் எந்த பதிலும் தெரிவிக்காமல் இருந்ததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மணிகண்டன் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலை வீசித் தேடி வருகின்றனர்.