தேசப்பிதா மகாத்மா காந்தியின் எளிமை, எண்ணங்கள் உலகின் மூலை முடுக்கெங்கிலும் எதிரொலிக்கும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பல்துறை அறிஞர்கள், பொழுதுப்போக்கு துறையைச் சேர்ந்த சினிமா நட்சத்திரங்களுடன் கலந்துரையாடினார்.அப்போது அவர் கூறியதாவது, உருவாக்கும் திறமை மகத்தானது. உருவாக்குதல் என்பது நாட்டுக்குத் தேவை. உருவாக்குதல் என்பது நாட்டுக்கு உத்வேகத்தை அளிக்கும். சிலர் வெளிநாட்டு பொழுதுபோக்குத் துறைகளிலும் வேலை பார்க்கின்றனர். அவர்கள் தங்களின் துறை மூலம் உலகெங்கிலும் காந்திஜியின் எளிமை, எண்ணங்களை பரப்புகின்றனர். இந்த பணி ஈடுஇணையற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஆமீர் கான், காந்திஜி குறித்த தனது எண்ண ஓட்டங்களை பகிர்ந்துக் கொண்டார். அவரை பிரதமர் நரேந்திர மோடி வெகுவாக பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் காந்திஜி குறித்து பேசிய ஷாருக்கான், நிறைவாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் தவிர மேலும் சிலரும் கலந்துக் கொண்டனர்.தண்டி உப்பு சத்தியாகிரகத்தை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தண்டி அருங்காட்சியகத்தை சினிமா நட்சத்திரங்கள் பார்வையிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.மகாத்மா காந்தி குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தரில் 1869ஆம் ஆண்டு பிறந்தார் என்பது நினைவு கூறத்தக்கது.