தஞ்சாவூர் அண்ணாநகர் பகுதியில் செல்வ கிருஷ்ணன் என்பவர் வசித்துவருகிறார். அவரின் வீட்டில் இரண்டு மின் இணைப்புகள் உள்ளன. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதத்திற்கான மின் கட்டணத்தை கணக்கீடு செய்யாத காரணத்தினால்,2019 ஆம் ஆண்டில் உள்ள மின் கட்டணத்தை கட்டுமாறு மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து 2019 ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வந்த தொகையான 4,948 ரூபாயை அவர் கட்டியுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மின் கணக்கீடு செய்த ஊழியர்கள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் கணக்கிடாமல், ஏற்கனவே கட்டணம் செலுத்திய ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களையும் சேர்த்து கணக்கீடு செய்து மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். அதனால் அதிர்ச்சி அடைந்த செல்வ கிருஷ்ணன், ஏற்கனவே மின்கட்டணம் செலுத்தியதாக கூறிய நிலையிலும், மீண்டும் கட்டணம் செலுத்த கூறுகிறார்கள் என கேட்டதற்கு மின்வாரிய ஊழியர்கள் பதிலளிக்கவில்லை.
இதனைப் போலவே தங்கள் பகுதிகளில் ஏற்கனவே மின் கட்டணம் செலுத்திய மாதங்களுக்கு மீண்டும் இன் தொகை கணக்கீடு செய்து கட்டணம் கட்ட சொல்வதாகவும், இது குறித்து கேள்வி எழுப்பினால் உரிய பதில் அளிக்கவில்லை, கட்டணம் கட்ட தவறினால் மின் இணைப்பைத் துண்டித்து விடுவதாகவும் அவர் கூறியுள்ளார். அதனால் அரசு தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.