அரசு தொழிற்பயிற்சி நிலைய புதிய கட்டிட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையமானது ஒரு தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல பாடப்பிரிவுகளில் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு 5.56 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து அரசு கலை கல்லூரி எதிரே உள்ள இடத்தில் இந்த புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக கட்டுமான பணிகள் தடைபட்டது.
அதன்பின் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்துவரும் நிலையில் தற்போது புதிய கட்டிடத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் உரிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து முதல்வர் ஐஸ்டின்ஜெபராஜ் கூறியபோது வகுப்பறைகள், ஆய்வகம், தங்கும் விடுதி உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே ஒரு மாத காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மாற்றபட்டால் கிராமப்புற மாணவர்கள் மிகவும் பயன் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.