கேட்லோனியா தலைவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக நேற்று கேட்டலோனியா மக்கள் நடத்திய போராட்டத்தால் பார்சிலோனா நகரமே ஸ்தம்பித்துப் போனது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள கேட்டலோனியா மாகாணத்தை தனிநாடாக அறிவிக்கக் கோரி அங்குள்ள மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் கேட்டலான்களின் இந்தக் கோரிக்கைக்கு ஸ்பெயின் அரசு செவிசாய்க்கவில்லை.

இந்நிலையில், 2017ஆம் ஆண்டு கேட்டலோனியாவை தனிநாடாக அறிவிப்பது தொடர்பாக அம்மாகாண அரசு பொது வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் 90 சதவிகித கேட்டலோன் மக்கள், தனிநாட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, 2017 அக்டோபர் 27ஆம் தேதி கேட்டலோனியாவை சுதந்திர நாடாக கேட்டலோனியா நாடாளுமன்றம் அறிவித்தது.
அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கேட்டலோனியா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மேலும், பிரிவினைவாதத்தைத் தூண்டிவிடுவதாகக் கூறி கேட்டலோன் தலைவர்கள் மீது தேச துரோக வழக்கு போடப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பாக, ஸ்பெயின் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் 12 கேட்டலோன் தலைவர்களுக்கு தலா 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து கேட்டலோன் மக்கள் சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கேட்டலோனியா தலைநகர் பார்சிலோனாவில் நேற்று 5 மிகப்பெரிய பேரணிகள் நடைபெற்றது. 5 லட்சம் கேட்டலோன் மக்கள் கலந்துகொண்ட இந்த போராட்டத்தால் பார்சிலோனாவே ஸ்தம்பித்துப் போனது. இதைத்தொடர்ந்து, மாலையில் முகமூடிகள் அணிந்துகொண்டு ஏராளமானோர் வீதிகளில் இறங்கிப் போராடினர். இந்த போராட்டக்காரர்களைக் கலைக்க வாட்டர் கேனான், கண்ணீர் புகைக்குண்டுகள், ரப்பர் புல்லட்டுகள் ஆகியவற்றை காவல்துறையினர் பயன்படுத்தினர்.
இதில், 17 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 62 பேர் காயமடைந்ததாகவும் எல் பெய்ஸ் செய்தித்தாளில் செய்தி வெளிவந்துள்ளது. மேலும், பார்சிலோனாவில் நடைபெறவிருந்த ரியல் மேட்ரிட்-பார்சிலோனா கால்பந்து போட்டியும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.