கொடைக்கானலில் பெய்துவரும் கன மழையால் பேத்துப்பாறை வயல் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அதில் கயிறு கட்டி விவசாயிகள், பொதுமக்கள் ஆபத்தான முறையில் கடந்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரகாலமாக கன மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பேத்துப்பாறை வயல் பகுதியில் உள்ள ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நீர்வீழ்ச்சி, புலிச்சோலை அருவிகள், வில்பட்டி ஆறு, பெலாக்கெவை ஆறு என நான்கு ஆறுகள் பேத்துப்பாறை பெரியாற்றில் கலப்பதால், கன மழை நேரங்களில் பெரும் காட்டாற்று வெள்ளம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும் அக்கரைப்பகுதியில் விவசாயம் செய்யும் மக்கள் தாங்கள் விளைவித்துள்ள காய்கறிகளை தலையில் சுமந்துகொண்டு இக்கரைக்கு கயிறு கட்டி, ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து செல்கின்றனர். இதனால் கன மழை பெய்யும் காலகட்டம் வந்தாலே இந்த நிலையில்தான் பயணிக்கிறோம் என வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே அரசு இதனை கவனத்தில் கொண்டு தடுப்பணையுடன் கூடிய பாலம் கட்டித்தந்தால் நீர் மேலாண்மைக்கும், ஆற்றைக் கடக்கவும் பலனளிக்கும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.