கூட்டணி என்பது தோளில் போடும் துண்டு போன்றது. தேவையென்றால் துண்டைத் தோளில் போட்டுக் கொள்ளலாம், தேவை இல்லாவிட்டால் எடுத்து கழட்டி வைத்துக் கொள்ளலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
அறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்தநாளையொட்டி மதுரை சிம்மக்கல்லில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அண்ணாவின் கொள்கைகள் சித்தாந்தத்தை தாங்கிப்பிடித்து அதிமுக செயல்பட்டு வருகிறது. அதிமுக ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்துகிறது. அண்ணாவின் எண்ணத்தில் எடப்பாடியார் செயல்படுத்தி வருகிறார்.
திமுகவின் திட்டங்கள், செயல்பாடுகள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். திமுக கொண்டுவந்துள்ள நீட் தேர்வு சட்ட மசோதாவை திமுக எப்படி செயல்படுத்தப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். கூட்டணி என்பது தோளில் போடும் துண்டு மாதிரி. தேவை என்றால் தோளில் போட்டுக் கொள்ளலாம்.
தேவை இல்லாவிட்டால் கீழே வைத்து விடலாம். அதிமுக எந்த ஒரு காலகட்டத்திலும் கூட்டணியை நம்பி இருந்தது கிடையாது. தொண்டர்களை மட்டுமே அதிமுக நம்பியிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் என்பது அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் உள்ள செல்வாக்கை பொறுத்து அமையும். எனவே பாமக விலகியதால் எந்த ஒரு வருத்தமும் இல்லை என்றும் அறிவித்துள்ளார்.