உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு கைக்குழந்தையுடன் சென்ற பெண்ணிடம் ஓடும் பேருந்திலிருந்து 5 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருகாலபட்டி கீழாநிலை பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு தனது இரண்டரை வயது குழந்தையை தர்ஷனை அழைத்துக்கொண்டு பேருந்தில் தேவக்கோட்டை பகுதிக்கு சிவசங்கரி சென்றுள்ளார். அப்போது அவர் கையில் வைத்திருந்த பையில் 5 பவுன் நகை வைத்திருந்திருக்கிறார்.
இதனையடுத்து தனது நிறுத்தம் வந்தவுடன் குழந்தையுடன் பேருந்திலிருந்து இறங்கி உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு சென்று பார்த்த போது பையில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து பேருந்தில் யாரோ அதைத் திருடி இருக்கலாமென சந்தேகமடைந்த சிவசங்கரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.