மாதசீட்டு என்று கூறி பலரிடம் இருந்து பணம் பெற்று கொண்டு ஏமாற்றிய நபர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் தேவதானபட்டியில் வசித்து வரும் காஜா என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் மாதசீட்டு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சீட்டுத்தொகையில் பணம் செலுத்தினால் சீட்டு காலம் முடிந்ததும் சமந்தபட்டவர்களுக்கு வீட்டுமனை வழங்கப்படும் என கூறியுள்ளார். இதனை நம்பிய பலரும் சீட்டில் பணம் செலுத்தி வந்துள்ளனர். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த சுகைபு ரகுமான் காஜாவிடம் மொத்த சீட்டு பணத்தையும் செலுத்திய பின்னர் காஜா நிலத்தை பதிவு செய்து கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார்.
இதனால் சுகைபு ரகுமான் மதுரை முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இதுகுறித்து மனு தாக்கல் செய்துள்ளார். அதன் அடிப்படையில் இச்சம்பம் குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தேனி மாவட்ட குற்றபிரிவு காவல்துறையினர் காஜா மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த சிராஜ்தீன், முனியாண்டி, சலீம்ராஜா, உபயதுல்லா, பரக்கத்துல்லா ஆகியோரிடமும் காஜா பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியது தெரியவந்துள்ளது. மேலும் இதே போல் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் உரிய ஆவணங்களோடு மாவட்ட குற்றபிரிவு காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.