தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் காணாமல் போன பங்குச்சந்தை அதிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள எல்லப்பாளையம் சாலை பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இவர் கடந்த ஒன்றரை வருடமாக பங்குச்சந்தை நிறுவனத்தை நடத்தி வந்தார். இதில் எதிர்பாராமல் விதமாக நஷ்டம் வந்ததால் ரவிக்குமார் மனமுடைந்து காணப்பட்டார். இதனால் அவரது மனைவி புவனேஸ்வரி, ரவிக்குமாருக்கு ஆறுதல் சொல்லி வந்தார். இதனையடுத்து எப்போதும்போல் ரவிக்குமார் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு சென்றார்.
அதன்பின் புவனேஸ்வரி, ரவிக்குமார் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு சாப்பிட அழைத்துள்ளார். அதற்கு ரவிக்குமார் சிறிது நேரத்தில் வருவதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் ரவிக்குமார் வீட்டிற்கு வராததால் புவனேஸ்வரி அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளார். ஆனால் ரவிக்குமார் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் புவனேஸ்வரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ரவிக்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.