பிரான்சில் கொரோனா தொற்றை சரியாக கையாளவில்லை என்று முன்னாள் சுகாதார அமைச்சர் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் சுகாதார அமைச்சராக, கடந்த 2017ஆம் வருடம் மே மாதத்தில் அக்னஸ் புசின் என்பவர் பொறுப்பேற்றார். ஆனால், நாட்டில் கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்தில் அக்னஸ் புசின், பாரீஸ் மேயர் பதவியில் போட்டியிட 2020 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் தன் பதவியிலிருந்து விலகினார்.
மேலும் அவர் அப்போது, கொரோனா பாதிப்பு, குறைவான ஆபத்து உடையது தான் என்று தெரிவித்தார். சிறிது நாட்கள் கழித்து கொரோனாவை, ‘சுனாமி நெருங்குகிறது’ என்று கூறியிருந்தார். எனவே, கொரோனா பாதிப்பு தொடர்பில் முன்பே தெரிந்திருந்தும், அந்த நேரத்தில் பதவியிலிருந்து விலகி, அதனை சரியாக கையாளவில்லை என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், கொரோனா தொற்று காலத்தில் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் அவர் தரப்பு வாதத்தை தெரிவிக்க அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது பத்திரிக்கையாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளதாவது, உண்மையை வெளிக்கொண்டுவர தனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதை வரவேற்பதாக கூறினார்.
மேலும், “உலகில் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடிக்கு பிரான்ஸை தயார்படுத்துவதற்கு அதிக நடவடிக்கைகள் மேற்கொண்ட போது, நான் கட்டாயம் அரசின் செயல்பாடுகளையோ, என் செயல்களையோ கீழிறங்க விடமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.