திருப்பூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த நான்கரை வயது சிறுமி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழவஞ்சிபாளையம் வேலன் நகரில் சுரேஷ் மற்றும் தீபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தக்ஷனா என்ற நான்கரை வயது பெண்குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் தீபா தனது மகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு பூம்புகார் நகரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆட்சியர் அலுவலகம் அருகே பின்னோக்கி வந்த பேருந்து, அங்கிருந்த காரின் மீதும் இருசக்கர வாகனத்தின் மீதும் மோதி நிலை தடுமாறியது. அப்போது பேருந்தின் பின் சக்கரத்தில் சிறுமி தக்ஷனா விழ, சிறுமி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் தாய் தீபா சில அடி தூரம் இருசக்கர வாகனத்தில் இழுத்துச் செல்லப்பட்டு படுகாயமடைந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீபாவை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தலை நசுங்கி சிறுமி உயிரிழந்ததை கண்டு அப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வாகனம் ஓட்டுநரை பிடித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.