சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. இதனை வெளிமாநில பக்தர்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அதேசமயம் முன்பதிவு செய்யும் பக்தர்களில் பெரும்பாலானோர் தரிசனம் செய்ய வருவதில்லை. அதனால் மற்ற பக்தர்களுக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிடைக்காமல் போகும் சூழல் உருவாகிறது. ஆன்லைன் முன்பதிவு இலவசமாக அனுமதிப்பதே இதற்கு காரணம் என தேவசம்போர்டு கூறியுள்ளது. அதன் காரணமாக ஆன்லைன் முன்பதிவிற்கு கட்டணம் வசூலிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. முன்பதிவு செய்து தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு, அந்தக் கட்டணம் திருப்பி கொடுக்கப்படும். தரிசனத்திற்கு வரவில்லை என்றால் அந்தக் கட்டடம் கோவிலுக்குச் சென்று விடும். வரும் மண்டலம் காலம் முதல் இந்த முறை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தேவசம்போர்டு தலைவர் கூறியுள்ளார்.