ஜெயலலிதாவின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில் தலைவி படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத், எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமி, கருணாநிதி கதாபாத்திரத்தில் நாசர் நடித்துள்ளனர். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு என்றாலும் படத்தின் தொடக்கத்தில் இது கற்பனை படைப்பு என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதாவை அந்த படத்தில் ஜெயா என்றும், எம்ஜிஆரை எம்ஜேஆர் என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி நிலையில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இதனை அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் சினிமா பிரியர்கள் பலரும் தற்போது பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை பார்த்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைவி படத்தை பொறுத்தவரை நன்றாக எடுத்துள்ளனர் என்றும் சில காட்சிகளை மட்டுமே அதில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஜெயலலிதாவின் துணிவு, அறிவு, விவேகம் ஆகியவற்றின் பன்முகத்தன்மை காட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் அதிமுகவிற்கு திமுக கொடுத்த தொல்லைகள், அராஜகங்கள் காட்டப்படவில்லை. வரலாறு சொல்லும் போது அதையும் சொல்ல வேண்டும். எம்ஜிஆர் அமைச்சர் பதவியை கேட்பதுபோல் உள்ள காட்சியை நீக்க வேண்டும் என்றும், சசிகலாவுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. அவர் வீட்டு வேலைகளை கவனிக்க வந்தவர் என்பதை படத்தில் சரியாக சொல்லியிருக்காங்க என்று கூறியுள்ளார்.