வருமான வரியை தாக்கல் செய்ய டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் சந்திக்கும் சிரமங்களை கவனத்தில் கொண்டு இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 2020-2021 நிதி ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையை சமர்ப்பிக்கும் தேதி அக்டோபர் 31-ல் இருந்து 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பரிவர்த்தனை மற்றும் குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் தேதி 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வருமானவரித் துறையின் புதிய இணையதளத்தில் பயனர்கள் உள் நுழைய முடியாமல் போனதாலும் அதில் ஏற்பட்ட சிரமங்களாலும் இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.