விவசாயிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செழியநல்லூர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் மணிசுடலை தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அதன்பின் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுகுறித்து மனு கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில், தெற்கு செழியநல்லூர் குளம் நீண்ட நாட்களாக தூர் வாராமல் இருக்கிறது. இந்நிலையில் குளம் தூர்வாரி குடிமராமத்து செய்ததாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த குளத்தில் எந்த வித பணியும் நடைபெறவில்லை. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.