வங்கியில் திருட முயன்ற கொள்ளையர்களை பிடிப்பதற்கு காவல்துறையினர் ௪ தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மேற்குரத வீதியில் பொதுத்துறை வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு மர்மநபர்கள் சிலர் வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்தும், கண்காணிப்பு கேமராக்களின் இணைப்பை துண்டித்தும் திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் பணம் இருக்கும் லாக்கரின் கதவை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனால் வங்கியில் இருந்த 30கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணம் தப்பியுள்ளது.
இதனையடுத்து இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருச்செங்கோடு துணை சூப்பிரண்டு அதிகாரி சீனிவாசன் தலைமையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி கைரேகை நிபுணர்களை வரவழைத்து திருடர்கள் விட்டு சென்ற தடயத்தை சேகரித்துள்ளனர். இதனைதொடர்ந்து கண்காணிப்பு கேமராக்களின் இணைப்புகளை துண்டித்ததால் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிப்பதற்கு துணை சூப்பிரண்டு அதிகாரி சீனிவாசன், டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சசிகுமார், புதுசத்திரம் இன்ஸ்பெக்டர் பாண்டியர் ஆகியோர் தலைமையில் ௪ தனிப்படை அமைத்து அதிரடி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கூடிய விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.