மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் அப்பெண்ணின் காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நந்து பார் பகுதியில் உள்ள ரயில் நிலையத்திற்கு அருகில் இளம்பெண் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இளம் பெண்ணின் கை கால்கள் துண்டிக்கப்பட்டு, பிளேடால் முகம் முழுவதும் கிழித்து சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் சடலத்தை போலீஸார் மீட்டனர். இதையடுத்து இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர். பின்னர் அங்கிருந்து ரயில் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் வாலிபர் ஒருவர் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இதை வைத்து விசாரணை செய்தபோது அவர் சூரத் பகுதியை சேர்ந்த வினை ராய் என்பது தெரியவந்தது. மேலும் அப்பெண்ணின் காதலன் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரணை செய்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வினை ராய் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து இரண்டு ஆண்டுகள் அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதை அறியாத அந்த பெண் வினை ராயிடம் தன்னை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளார்.
ஆனால் இவரோ பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று தாமதித்து வந்துள்ளார். என்னை ஏமாற்ற நினைத்தால் நான் காவல் நிலையத்தில் உன் மீது புகார் அளித்துவிடுவேன் என்று அப்பெண் வினையை மிரட்டவே, ஆத்திரமடைந்த அவர் காதலியை அழைத்து வந்து கொடூரமாக கொலை செய்துவிட்டு, பிறகு தனது வேலையை பார்க்கத் தொடங்கியுள்ளார். ஒரு இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.