காற்றாடியை பிடிக்க முயற்சி செய்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிஷோர் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பெற்றோர் வேலைக்கு சென்ற நேரத்தில் கிஷோர் தனது நண்பர்களுடன் வீட்டின் மாடியில் காற்றாடி பறக்கவிட்டு விளையாடி கொண்டிருந்தான். இதனை அடுத்து திடீரென அறுந்த காற்றாடியை எட்டி பிடிக்க முயன்ற போது அங்கிருந்த மின்சார வயரில் கிஷோரின் கால் உரசி விட்டது.
இதனால் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த கிஷோரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அந்த சிறுவனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.