கேரள மாநிலத்தில் சில்லறை மதுபான விற்பனையை பெவ்கோ என்ற பெயரில் செயல்படுத்தி வருகின்றது. உள்நாட்டு மதுபானங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு மதுபானங்கள், பீர் போன்றவையும் இதில் கிடைக்கின்றது. இதன் மூலம் மாநில அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தரும் பொதுத்துறை நிறுவனமாக இது விளங்குகிறது. ஓணம், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் மதுபான விற்பனை அதிகளவில் இருக்கும். கேரளாவைப் பொறுத்தவரை மதுபானக்கடைகள் தனியார் இடங்களில் தான் செயல்பட்டு வருகின்றது. இந்த கடைகளில் மதுபானங்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இதனால் குடிமக்கள் இடையூறு இன்றி மது வாங்கி செல்வதற்கு புதிய வசதி ஒன்றை மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. அது என்னவென்றால் மாநில அரசுக்கு சொந்தமான போக்குவரத்துக் கலகத்திற்கு மாநிலம் முழுவதும் பணிமனைகள் இருக்கின்றது. இவற்றுக்கு சொந்தமான கட்டிடங்களில் ஏராளமான கடைகள், அறைகள் உள்ளன. இவை அனைத்தும் பல ஆண்டுகளாக வாடகைக்கு யாரும் எடுக்க முன்வராத காரணத்தினால் மூடியே கிடைக்கின்றது. தற்போது பல்வேறு அரசு அலுவலங்கள் அதிக வாடகைக்கு தனியார் கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றது. எனவே காலியாக இருக்கும் போக்குவரத்து துறைக்கு சொந்தமான அறைகள் மற்றும் கடைகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மதுபான கடைகள் செயல்படுவதற்கு இதில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது மதுபான கடைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் அமர்ந்து மது அருந்துவதற்கு அனுமதி இல்லை என்பதால் இங்கு கடைகளை திறந்தால் எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை. இதன் மூலம் போக்குவரத்து கழகத்திற்கு வருமானமும் கிடைக்கும். மது பிரியர்கள் எளிதில் வாங்கிக் கொண்டு செல்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோணி ராஜும் அனுமதி வழங்கியுள்ளார்.