நியாயவிலைக் கடைகள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி, பருப்பு, சீனி, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய சமையல் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இந்த திட்டம் தமிழ்நாட்டில் தான் செயல்படுத்தப்பட்டது. ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு கொரோனா நிதியுதவி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் என்பது இனிவரும் நாட்களில் சாத்தியமாகாது என்று கூறப்படுகிறது.
ஏனெனில் ரேஷன் பொருட்களை பெறுவதற்கான தகுதியான விதிகளில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான பணி கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது. நாடு முழுவதுமாக நியாயவிலைக் கடைகள் மூலமாக 80 கோடி மக்கள் ரேஷன் பொருட்களை பெற்று வருகின்றனர் அவர்களில் வசதி படைத்தவர்களும் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள பொது விநியோகத் துறை, இதை மனதில் வைத்து தகுதியானவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் சென்றடையும் வகையில் சில மாற்றங்களை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து, உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே தெரிவிக்கையில், கடந்த ஆறு மாதங்களாக ரேஷன் பொருட்கள் பெறுவதற்கான தகுதியை நிர்ணயிக்கும் விதிகளில் மாற்றம் ஏற்படுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. மாநிலங்கள் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. இந்த புதிய விதிகள் இந்த மாதம் இறுதி செய்யப்படும். புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டதும் தகுதி உடையவர்கள் மட்டுமே ரேஷன் பொருட்களை வாங்க முடியும். தகுதியற்றவர்களுக்கு பலன் கிடைக்காது என்று தெரிவித்துள்ளார்.