இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் 2-வது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் – ஷர்துல் தாகூர் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் .
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்களும் குவித்தது .இதன் பின்னர் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது .இதில் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் குவித்தது. இதில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 127 ரன்கள் குவித்து அசத்தினார் மறுமுனையில் புஜாராவும் 62 ரன்கள் குவித்தார். இதன்பிறகு கேப்டன் விராட் கோலி , ஜடேஜா இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது.
இதில் ஜடேஜா 14 ரன்னில் வெளியேற இவரைத் தொடர்ந்து ரகானே டக் அவுட் ஆகி வெளியேறினார். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி 44 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதன் பிறகு களமிறங்கிய ரிஷப் பண்ட் – ஷர்துல் தாகூர் ஜோடி அதிரடியாக விளையாடினர் .இருவரும் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு அடித்து துவம்சம் செய்தனர். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது .இதில் ஷர்துல் தாகூர் 60 ரன்னும் ரிஷப் பண்ட் 50 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 466 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணியை விட 367 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி உள்ளது. இதன் பிறகு 368 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.