விளக்கு ஏற்றிய போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து நேர்ந்ததால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெள்ளையாபுரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராசாத்தி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராசாத்திக்கும் ஆலாவூரணி பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மணிகண்டன் ராசாத்தியின் நகையை அடகுவைத்து வீட்டிற்கு ஒத்தி பணம் கொடுத்துள்ளார்.
அதன் பிறகு இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கோபமடைந்த ராசாத்தி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் பெற்றோர் ராசாத்தியையும் மணிகண்டனையும் சமாதானம் பேசி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதியன்று வீட்டில் விளக்கு ஏற்றிய போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து நேர்ந்துள்ளது. இந்த தீ விபத்தில் ராசாத்தி பலத்த காயமடைந்துள்ளார்.
இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் ராசாத்தியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் ராசாத்திக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக அவர் உயிரிழந்துவிட்டார். இது குறித்து ராசாத்தியின் தந்தையான ராஜேந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.