அங்கன்வாடி மையத்தின் கட்டிடங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் இருகின்றதால் சீரமைத்து தருமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடபொன்பரப்பி கிராமத்தில் அங்கன்வாடி மையம் அமைந்திருக்கிறது. இதில் தினமும் 20-க்கும் அதிகமான குழந்தைகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திறக்கப்பட்டிருக்கும் அங்கன்வாடி மையம் வைரஸ் தாக்கம் காரணத்தினால் மூடப்பட்டிருந்தது. பின்னர் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் முறையான பராமரிப்பு இல்லாததால் அங்கன்வாடி கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. அதன்பின் மேற்கூரையில் அமைக்கப்பட்டிருக்கும் ஓடுகள் உடைந்து திறந்த நிலையில் காணப்படுகிறது.
இதனால் மழைக்காலங்களில் மழை நீரும், வெயில் காலங்களில் சூரியனின் கதிர் ஒளியும் உள்ளே புகுந்து குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து தற்போது பெய்து வருகின்ற கனமழையின் காரணமாக கட்டிடத்தின் மேற்கூரையில் இருக்கும் ஓடுகள் உடைந்து கிழே விழுகின்றது. இதனை தொடர்ந்து குழந்தைகள் மதிய உணவை அருந்தி வருகின்ற நிலையில் அங்கன்வாடியின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் எந்த விதமான விபத்துக்கள் நிகழாத வண்ணம் அங்கன்வாடி மையத்தை சீரமைத்து தருமாறு குழந்தைகளின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.