ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்நிலை பகுதியில் மழை பெய்து வருவதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. இதனையடுத்து காவிரி நீர்நிலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை இல்லாததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. அதன்பின் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்நிலை பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு, கேரட்டி, ராசிமணல் திட்டு போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. அதன்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்து மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் போன்ற அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனைத்தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினர் காவிரி கரையோரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.