கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி ஒர்க் ஷாப் மேற்கூரை மீது பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சின்னவேடம்பட்டி பகுதியில் வியாபாரியான ரகுவரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரில் கணபதி நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் தனியார் மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த ரகுவரனின் கார் சாலையில் தாறுமாறாக ஓடி உள்ளது. இதனையடுத்து அங்கிருந்த மரத்தின் மீது மோதி சுமார் 6 அடி பள்ளத்தில் இருந்து ஒர்க்ஷாப்பின் கூரை மீது கார் பாய்ந்து விட்டது.
இந்நிலையில் ரகுவரன் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் அவர் உயிர் தப்பிவிட்டார். ஆனால் அவரால் காரின் கதவுகளை திறக்க முடியாததால் போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிறு கட்டி காரை கீழே இறங்கி உள்ளனர். அதன்பிறகு ரகுவரனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.