ரயில்வே மேம்பாலத்தில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதை தடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள ரயில்வே மேம்பாலம் தஞ்சை-நாகை சாலையை இணைக்கும் வகையில் அமைந்து இருக்கின்றது. இந்த சாலையில் இருந்து திருவாரூர் நகருக்குள் செல்லும் பிரதான சாலை செல்வதால் 3 வழிப்பாதையாக இருந்து வருகின்றது. இதில் தஞ்சை-நாகை சாலை என்பது தேசிய நெடுஞ்சாலை என்பதால் அதிக வாகனங்கள் எந்நேரமும் செல்வது வழக்கமாக இருக்கின்றது. இதன் காரணமாக அடிக்கடி வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
எனவே இந்த ரயில்வே மேம்பாலத்தில் தஞ்சை செல்லும் சாலையில் கிரேன், லாரி உட்பட கனரக வாகனங்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் இரண்டு வாகனங்கள் எதிர் எதிராக கடந்து செல்லும்போது சாலை ஓரம் நிறுத்தப்படும் வாகனங்களால் நடந்து செல்லும் பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரயில்வே மேம்பால தஞ்சை சாலை இருபுறங்களில் கனரக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.