அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 15-வது ஐபிஎல் சீசனில் கூடுதலாக இரண்டு அணிகள் இடம்பெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது .
14 -வது ஐபிஎல் சீசன் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது .இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 15-வது ஐபிஎல் சீசனில் கூடுதலாக இரண்டு அணிகள் இடம்பெறும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது .இது குறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில்,’ 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் கொண்ட ஐபிஎல் தொடராக நடத்தப்படுகிறது .இந்த புதிய ஐபிஎல் அணியை வாங்குவதற்காக ஏலத்தில் ஆரம்ப தொகையாக ரூபாய் 2,000 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஐபிஎல் அணிக்கான ஏல விண்ணப்பத்தை அக்டோபர் 5-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் பிசிசிஐ விதிமுறைகளுக்கு உட்பட்ட தகுதி உள்ள நிறுவனங்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள முடியும் ‘ என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .எனவே 2022 ஆண்டிலிருந்து 10 அணிகள் கொண்ட ஐபிஎல் தொடரில் விளையாட இருப்பதால் பிசிசிஐக்கு கூடுதலாக ரூபாய் 5000 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த புதிய 2 அணிகளில் ஒன்றாக உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை கொண்டுள்ள அகமதாபாத் பெயரில் அணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .