திண்டுக்கல்லில் 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போஸ்கோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி நேற்றைய தினம் தனது சொந்த தம்பியுடன் தேவாலயத்திற்குச் சென்று வழிபட்டு விட்டு வீட்டிற்கு திரும்பி நடந்து வந்துள்ளார். அப்போது அங்குள்ள புதரில் இருந்த வாலிபர் ஒருவர் திடீரென்று அவர்களை வழிமறித்து அவரது தம்பியை தாக்கிவிட்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதில் பதற்றம் அடைந்த சிறுமி கூச்சலிட்டு அலறவே இளைஞர் தப்பியோடினார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர் வில்பட்டி பகுதியை அடுத்த கோவில்பட்டியை சேர்ந்த அந்தோணி பீட்டர் என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகளும் உள்ளதும் விசாரணையில் அம்பலமாகியது. இதையடுத்து காவல்துறையினர் இவரை அதிரடியாக கைது செய்தனர்.