சென்னையில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் 2 பேரை ஒரே நேரத்தில் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டிபன் இவர் ஒரு ஆட்டோ டிரைவர் ஆவார். இவரது நண்பர் ஆனந்த் இவர் இந்திரா நகரைச் சேர்ந்தவர். நெருங்கிய நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் பெரும்பாக்கத்தில் உள்ள மதுபான கடை ஒன்றுக்கு சென்று மது வாங்கி சற்று தொலை தூரம் சென்று அவர்களது சொந்த ஆட்டோவில் அமர்ந்து அருந்தியுள்ளனர். அப்போது அங்கே திடீரென்று வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று இருவரையும் கத்தியால் சரமாரியாக தொண்டை மற்றும் மார்பில் குத்தி விட்டு தப்பிச் சென்றது.
இதில் ஸ்டீபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். பின் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட பள்ளிக்கரணை காவல்துறையினர் விரைந்து வந்து ஆனந்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆனந்தும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அதில் கொலைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் 3 பேர் அதிவேகமாக வந்ததாகவும் அவர்களை ஜீவன் உட்பட சிலர் டிரைவர்கள் சேர்ந்து கடுமையாக கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர்கள் தங்களது கூட்டாளிகளுடன் வந்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த வேளையில் சந்தேகத்திற்குரிய வகையில் திரிந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலை தற்பொழுது பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.