காபூல் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அதிபர் ஜோ பைடன் வெள்ளைமாளிகையில் உரையாற்றியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் அதிகாரம் கொடி கட்டி பறக்கிறது. மேலும் அங்கு பயங்கரவாத ஊடுருவல் இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் நேற்று காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் விமான நிலையத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெடி குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து துப்பாக்கிச் சூடும் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்கா படை வீரர்கள் 17 பேர் உட்பட மொத்தம் 103 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்கா படை வீரர்கள் 18 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆப்கானில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் அமெரிக்கா படை வீரர்கள் அதிகமாக உயிரிழந்தது இதுவே முதல் தடவையாகும். ஆதிலும் அவர்கள் ஆப்கானை விட்டு வெளியேற இன்னும் கொஞ்ச காலமே இருக்கும் நிலையில் இவ்வாறு நிகழ்ந்துள்ளது. இது குறித்து அமெரிக்கா மக்களிடம் வெள்ளை மாளிகையில் வைத்து அதிபர் ஜோ பைடன் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உரையாற்றியுள்ளார். அதில் அவர் கூறியதாவது “இந்த சம்பவத்தை நடத்தியவர்கள் எவராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்களை நாங்கள் மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்.
எங்களது படை வீரர்கள் அவர்களுக்கு சரியான பதிலடியை கொடுப்பார்கள். இந்த தாக்குதலில் உயிரிழந்த படை வீரர்களை நினைவு கூறும் வகையில் அமெரிக்கா தேசியக்கொடி வரும் 30ஆம் தேதி வரை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அவர்கள் நிச்சயமாக எங்கள் நாட்டின் போற்றுதலுக்குரிய நாயகர்கள். இதற்கிடையில் ஏற்கனவே திட்டமிட்டபடி ஆப்கானிஸ்தானில் வரும் 31 ஆம் தேதி வரை மீட்புப் பணிகள் தொடரும். குறிப்பாக பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு எல்லாம் நாங்கள் அடிபணிய மாட்டோம். எங்களின் சேவை அங்கு தொடர்ந்து நடைபெறும்” என்று கூறியுள்ளார்.