Categories
மாநில செய்திகள்

பட்டியலின பெண்களுக்கு… திருமண உதவித்தொகை ரூ 1,00,000 ஆக உயர்வு… முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

பட்டியலின பிரிவு பெண்களுக்கு திருமண உதவி தொகை ரூ 75 ஆயிரத்திலிருந்து 1 லட்சமாக உயர்த்தப்படும்  என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்..

புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்கியது. வரலாற்றிலேயே முதன்முறையாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப் பேரவையில் 9,924 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதித்துறை பொறுப்பு வகிக்ககூடிய முதல்வர் ரங்கசாமி. அதனை தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில்,  மாநிலத்தின் சொந்த வருவாய் 6,190 கோடியாக உள்ளது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கிறேன். தமது ஆட்சி பொறுப்பேற்க உறுதுணையாக இருந்த பிரதமருக்கு நன்றி.

புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 5,000 உற்பத்தி மானியம் வழங்கப்படும். விவசாயத்தில் ஈடுபடும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். புதுச்சேரியில் புதிதாக உழவர் சந்தைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கறவை மாடுகள் பாரமரிப்பவர்கள், கூட்டுறவு சங்கங்களில் அல்லாதவர்களுக்கு 75% மானியத்தில் தீவனம் நடப்பாண்டு முதல் வழங்கப்படும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் ஆடுகள் வாங்க கடன் வழங்கப்படும்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.43 காசு குறைக்கப்படும்.. நிதி தட்டுப்பாடு உள்ள நிலையிலும் பெட்ரோல் மீதான வரியை குறைத்துள்ளோம்”. பட்டியலின பிரிவு பெண்களுக்கு திருமண உதவி தொகை ரூ 75 ஆயிரத்திலிருந்து 1 லட்சமாக உயர்த்தப்படும். ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகத்தில் பெறப்பட்ட மாணவர்கள் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும்.. புதுச்சேரியில் நடப்பு கல்வி ஆண்டு முதல் பட்டியலின பிரிவு மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும்.

கோரிமோடு பகுதியில் 500 படுக்கைகள் கொண்ட புதிய பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும். கொரோனாவை எதிர்கொள்ள கூடுதலாக ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

10 தொழிற்சாலைகளுக்கு உயர் மின் இணைப்பும், 50 தொழிற்சாலைகளுக்கு குறைந்த மின் இணைப்பு வழங்கப்படும். அனைத்து தீயணைப்பு நிலையங்களையும் கணினிமயம் மற்றும் வயர்லஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி நேரு வீதியில் உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து வளாகம் கட்டப்படும், அதில் அடுக்குமாடி கார் நிறுத்துமிடமும் அமைக்கப்படும் என்றார்..

Categories

Tech |