இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதம் அடிக்க இங்கிலாந்து 42 ரன்கள் முன்னிலையில் உள்ளது .
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நேற்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – கே.எல்.ராகுல் ஜோடி களமிறங்கினார். இதில் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய 5-வது பந்தில் கே.எல்.ராகுல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதன்பிறகு களம் இறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் இந்திய அணி 27 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது இறுதியாக 40.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 78 ரன்களில் இந்திய அணி சுருண்டது .
இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டான் தலா 3 விக்கெட்டும், ராபின்சன், சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர் .இதன்பிறகு இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது .தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் – ஹசீப் ஹமீத் ஜோடி களமிறங்கினர்.இருவரும் தொடக்கத்திலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் தடுமாறினார். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 120 ரன்களை குவித்துள்ளது. இதனால் இந்திய அணியை விட இங்கிலாந்து 42 ரன்கள் முன்னிலையில் உள்ளது.