Categories
தேசிய செய்திகள்

மனைவியை கொன்று… வாழைத்தோப்பில் புதைத்த விவசாயி… விசாரணையில் தெரியவந்த உண்மை…!!!

கர்நாடக மாநிலம் அருகே மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகா கல்லுவீரனஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவராஜா. இவரின் மனைவி ராணி. இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சிவராஜா தனது மனைவி ராணி மீது தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே தகராறு அதிகமாகவே ஆத்திரமடைந்த சிவராஜா மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதில் மனைவி ராணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் இவரின் உடலை வீட்டிற்கு பின்புறம் உள்ள வாழைத்தோப்பில் புதைத்து வைத்துவிட்டு, சிவராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுதொடர்பாக வாழைத் தோட்டத்தின் உரிமையாளர் சதீஷ் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை தோண்டி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சிவராஜ் தேடி வந்தனர். இந்நிலையில் சிவராஜா மலவள்ளியில் ஒரு வீட்டில் தலைமறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியபோது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக கூறினார். இதற்கு முன்னதாக சிவராஜாவும் அவரது மனைவி ராணியும் பெங்களூருவில் வசித்து வந்துள்ளனர். கொலை குற்றச்சாட்டு காரணமாக 7 வருடம் சிறை தண்டனை அனுபவித்து விட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையாகி உள்ளார். சிறையிலிருந்து வந்ததும் மனைவி ராணியை அழைத்துக் கொண்டு சொந்த ஊரான கல்லுவீரனஹள்ளி கிராமத்திற்கு வந்துள்ளார். அதற்குப் பிறகும் மனைவியின் நடத்தையின் மீது தொடர்ந்து சந்தேகம் இருந்து வந்ததால் அவரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

Categories

Tech |