மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பேசியுள்ளார்..
கர்நாடக மாநிலத்தில் எந்த அரசு அமைந்தாலும் அவர்கள் முதலில் கையில் எடுக்கக்கூடிய விவகாரம் காவேரி ஆறு தான்.. அந்த வகையில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா என்ன நிலைப் பாட்டை எடுத்தாரோ, தற்போது கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும் அதையே தான் எடுத்திருக்கிறார். மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று பதவியேற்ற அந்த முதல் நாள் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து அதற்கான காய்நகர்த்தல்களை தொடங்கி விட்டார்..
முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கர்நாடக மாநிலத்தில் இருக்கக்கூடிய மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் சேர்ந்து இன்றைய தினம் பல்வேறு அமைச்சர்களை சந்தித்துள்ளார். முதலில் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்தார்..
இந்நிலையில் தற்போது கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் எம் கர்ஜோல் உள்ளிட்டோர் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினர்.. இந்த இரண்டு சந்திப்பின் போதும் காவிரி விவகாரம், மேகதாது அணை கட்ட வேண்டும் எனவும், இந்த அணை அமைக்கும் பட்சத்தில் கர்நாடக மாநிலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பேசியதாக தெரிகிறது..
இரண்டு நாட்கள் பயணமாக டெல்லிக்கு வந்திருக்கிறார் முதல்வர் பசவராஜ் பொம்மை.. தொடர்ந்து அடுத்தடுத்து முக்கிய அமைச்சர்களையும் அவர் சந்திக்க திட்டமிட்டிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து பேச இருக்கிறார்.. கர்நாடகா முதல்வர்களும் சரி, அந்த மாநிலத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் சரி மேகதாது அணை விவகாரத்தில் தொடர்ந்து மத்திய அரசிற்கு கடுமையான அழுத்தத்தை கொடுத்து வருகிறார்கள்..