உத்தரபிரதேசத்தில் இறந்த குழந்தையைப் புதைக்க சென்ற இடத்தில் மற்றொரு உயிருள்ள குழந்தை கிடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதேஷ் குமார் சிரோகி. இவருக்கு வைஷாலி என்ற மனைவி இருக்கிறார். இவரது மனைவி பெயரில் பரேலியில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகின்றார்.கர்ப்பிணியான இவருக்கு 7 மாதத்தில் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு கடந்த புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை இறந்து பிறந்தது.
பின்னர் அந்த குழந்தையை சுடுகாட்டில் புதைப்பதற்காக அவரது கணவர் சிரோகி சென்றுள்ளார். அங்கு ஓரிடத்தில் மண்வெட்டியால் 3 அடி ஆழத்திற்கு தோண்டிய போது டொக் என்று சத்தம் கேட்டது. இது என்ன சத்தம் என்று சுதாரித்துக் கொண்ட அவர் பிறகு மெதுவாக மண்ணை அள்ளினார். உள்ளே பானை ஒன்று இருந்தது. அந்த பானையை திறந்து பார்த்தால் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அதில் ஒரு பெண் குழந்தை உயிரோடு இருந்தது. அதன்பின் குழந்தையை கண்டு அதிர்ச்சி அடைந்த சிரோகி மற்றும் அவருடன் வந்தவர்களும் குழந்தையை மீட்டு கொண்டு சென்றனர். அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதுபற்றி அந்த பகுதியின் எஸ்பி அபிநந்தன் சிங் கூறும்போது, குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அந்தக் குழந்தையை யார் புதைத்தார்கள் என்பது பற்றி தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார். குழந்தையைப் புதைக்க சென்ற இடத்தில் மற்றொரு குழந்தை கிடைத்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.