இந்தியாவில் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறையின் வளர்ச்சிக்காக அரசு தரப்பிலிருந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி மத்திய அரசு “மாற்று முதலீட்டு நிதி” என்ற திட்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு எக்ஸிம் பேங்க் மற்றும் சிட்பி வங்கிகள் இணைந்து நிதியுதவி அளிக்கின்றன. இந்த திட்டத்தின் கீழ் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபடும் சிறு, குறு ,நடுத்தர நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.
இந்த திட்டத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தொடங்கி வைத்துள்ளார். சர்வதேச அளவில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் ஏற்றுமதியில் சாதிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திறன் இருந்தும் அதற்கு ஏற்ப செயல்படாமல் இருக்கும் நிறுவனங்களை கண்டறிந்து அவற்றின் ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் இருக்கும் என்று அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நிதியுதவி மட்டுமல்லாமல் முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளும் அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும்.