கனடா அரசு, கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து, கனடா செல்லும் நேரடி விமானங்களுக்கான தடை, வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கனடா அரசு, இந்தியாவிலிருந்து தங்கள் நாட்டிற்கு வரும் மக்கள் வேறு நாட்டிற்குச் சென்று அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கிறது.
இந்த விதியால், கனடா நாட்டில் படிப்பிற்காக செல்லக்கூடிய இந்திய நாட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது தொடர்பில் கனடா பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்தியாவை சேர்ந்த லரினா குமார் என்ற மாணவி தெரிவித்துள்ளதாவது, கனடா அரசு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளதால், இந்தியாவிலிருந்து துபாய்க்கு சென்று அங்கிருந்து ஸ்பெயின் மற்றும் மெக்சிகோவிற்கு செல்ல வேண்டியுள்ளது.
அதன் பின்பே, கனடாவிற்கு செல்ல முடிகிறது. இதனால் போக்குவரத்து செலவு 1,50,000 திலிருந்து 5 லட்சமாக அதிகரித்துவிட்டது. வெளிநாட்டில் இரண்டு நாட்களுக்கு தங்கியிருந்து கொரோனா சான்றிதழ் பெறுவது கடும் அலைச்சலாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.