விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் குழந்தைகளுடன் குவிந்த மக்களை கலைப்பதற்காக தலீபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூலையும் கைப்பற்றி தன்வசப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து தலீபான் தீவிரவாதிகளிடம் அதிகாரம் சென்றதிலிருந்து காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இதுவரை சுமார் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் காபூல் மாகாணத்தில் உள்ள Hamid Karzai சர்வதேச விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறுவதற்காக குவிந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அந்த மக்களிடம் தலீபான் தீவிரவாதிகள் விமானத்தில் பயணிக்க சட்டபூர்வமான உரிமை இல்லாத மக்கள் வீட்டிற்கு செல்லுமாறு உத்தரவிட்டுள்ளனர். இருப்பினும் ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறியே ஆக வேண்டும் என்ற விரக்தியில் தங்கள் குழந்தைகளுடன் காபூல் விமான நிலையத்தின் முன் குவிந்துள்ளனர். இந்நிலையில் காபூல் விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் குழந்தையுடன் குவிந்த மக்களை விரட்டியடிப்பதற்காக தலீபான் தீவிரவாதிகள் மற்றும் வெளிநாட்டு படைகள் வானத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அந்த துப்பாக்கிச் சத்தத்தை கேட்டவுடன் மக்கள் தங்கள் குழந்தைகளுடன் தலைதெறிக்க ஓடியுள்ளனர். மேலும் பெரும்பாலான மக்கள் விமானத்தில் பயணிக்க சட்டபூர்வமாக உரிமை இல்லாமல் விமான நிலையத்திற்குள் நுழைய முயற்சி செய்து வருவதாக ஊடகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.