அடிப்படை வசதிகள் செய்து தராததால் பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீரை 15 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், சாலை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் கோபமடைந்த அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் பள்ளபட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், குடிநீர் விநியோகம் செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.