ஒடிசாவில் விரைவு ரயில்லில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 5 கோடி மதிப்பிலான சுமார் 13 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.
அவுராவிலிருந்து மும்பைக்கு செல்லும் ஞானேஸ்வரி விரைவு இரயிலில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையின் இயக்குனரகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ரூர்கேலா என்ற பகுதியை வந்தடைந்த ஞானேஸ்வரி விரைவு ரயிலில் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் பயணிகளிடம் சோதனை நடத்தினர்.
அப்போது 110 வெளிநாட்டு தங்க பிஸ்கட்டுகளை 2 பயணிகள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்களின்றி தங்கத்தை எடுத்து வந்த மும்பையை சேர்ந்த இருவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 5 கோடி மதிப்பிலான தங்க பிஸ்கட்டுகளை புவனேஸ்வர் மத்திய கலால் மற்றும் சுங்க துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக வருவாய் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.