சாராயம் விற்பனை செய்ய பாலித்தீன் பை கொடுத்து உதவி செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எடுத்தவாய்நத்தம் பகுதியில் சாராய விற்பனை செய்வதாக காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி அப்பகுதிக்கு சென்று சாராய வேட்டையில் ஈடுபட்ட போது சாராயம் விற்பனை செய்த சீனிவாசன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் கூலிக்காகத் தான் சாராயம் விற்பனை செய்வதாகவும், பெரியசாமி என்பவர் தான் தன்னை விற்க சொன்னதாகவும் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து சீனிவாசன் கொடுத்த தகவலின்படி பெரியசாமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன் பின் அவரிடம் நடத்திய விசாரணையில் கல்வராயன்மலை மொட்டையன் ஊர் கிராமத்தில் வசிக்கும் கோவிந்தன் விற்பனைக்காக சாராயம் கொடுத்ததும் அப்பகுதியில் இருக்கும் கடைகளில் பாலித்தீன் பைகளை வாங்கியதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கோவிந்தன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வருவாய்த் துறையினரின் உதவியுடன் அப்பகுதியில் இருக்கும் குறிப்பிட்ட கடைகளை காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர்.